நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (15) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்தோம். அதற்காக எங்களுக்கு சிறந்த புத்திஜீவிகள் சபையுடன் , திறமையான சட்டத்தரணிகளும் இருந்தனர். நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கிறது.
மக்களின் நம்பகத்தன்மை என்ற கொள்கைகளை கோட்டாபய ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நிவாட் கப்ரால், டபிள்யூ.டீ. லக்ஷ்மன், பீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகல மற்றும் நாணயச்சபை மீறியுள்ளதாக தீர்ப்பளித்திருக்கின்றனர்.
நாட்டை வங்குரோத்து அடையச்செய்தது யார் என்பது தொடர்பாக கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில் இந்த பொருளாதார வங்குரோத்து நிலைக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் தெளிவாக பெயர் குறிப்பிட்டு அறிவித்துள்ளது.
எனவே நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்து பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தருப்பவர்களே இந்த நிலைக்கு காரணம். எனவே நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என்றார்.