web log free
December 10, 2023

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலம் இதோ

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத்திற்கும் முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, 2024 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்த பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதன்படி அடுத்த வருடம் எந்த நேரத்திலும் தேசிய தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருட வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,855,000 எனவும், கடந்த ஆண்டு (2022) வாக்காளர்களின் எண்ணிக்கையை விட இந்த வருடம் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். .