web log free
November 25, 2024

கூட்டு ஒப்பந்தம் ரத்தானாலும் இ.தொ.கா மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும்

சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் இ.தொ.காவின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், சர்வதேச சந்தையில் காணப்படும் தேயிலையின் விலை மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் எனவும், கம்பனிகள் சம்பள உயர்வு குறித்து இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெறும் வியாக்கியானம் மட்டுமே பேசிக்கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒரு கூத்து ஒப்பந்தம் எனவும், கூட்டு ஒப்பந்தம் மரண சாசனம் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்த விமர்சகர்கள், மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் போது இவர்கள் காணவில்லை. இ.தொ.காவால் கூட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட போதிலும் இ.தொ.கா மக்களுக்காக தொடர்ந்தும் சேவையை முன்னெடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd