web log free
December 23, 2024

அரச தமிழ் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கேள்வி எழுப்பும் மனோ எம்பி

தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ்_பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா?

 

பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது என்று சொன்னேன். மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும். ஆனால், அதற்கு முன் நமது மாணவர் பல்கலை செல்வதற்கான “கல்வி பாதையை” வெட்டுவோம் என்றும் சொன்னேன். அதுதான் மேலே சொன்ன பாட விதானங்களுக்கான விசேட தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்றும் சொன்னேன்.

எனது கருத்துகள் சரியா? பிழையா? என தமிழ் பாடசாலை அதிபர்கள் முதலில் பதில் சொல்லட்டும். அதையடுத்து, அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்பி அனுப்பும் அப்பாவி தாய்மார், தந்தைமார் பதில் கூற வேண்டும். கல்வியிலாளர்கள், சமூக உணர்வாளர்கள் பதில் கூறட்டும். எனது நேரடி 0777312770 வாட்சப் எண்ணுக்கு அல்லது எனது நேரடி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சலுக்கு பதில்களை அனுப்பட்டும்.

இல்லாவிட்டால், நான் சொல்வதை எல்லாமே எதிர்த்து கட்சி அரசியல் செய்கின்ற, கல்வியை பற்றி எந்தவித தூரப்பார்வையும் இல்லாத அரசியல்வாதிகள் கையில், தமிழ் பிள்ளைகளின் கல்வியை ஒப்படைத்து விட்டு, தந்தை செல்வா சொன்னது போல், “கடவுள் காப்பாற்றுவார்” என ஒதுங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மத்திய கொழும்பு பாடசாலை பெற்றோர்-பழைய மாணவர் மத்தியில் உரையாடிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது

மலையகம் என்றால், “மலைகளை” மட்டும் தேடி ஓடாதீர்கள். கொழும்பின் அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், இங்கு வந்து தொழில் நிமித்தம் குடியேறியுள்ள பாமர மலையக மக்களின் பிள்ளைகள்தான் என்றும் கூறினேன். அதேபோல் கிளிநொச்சி, வன்னி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்தும் தொழில் நிமித்தம் குடியேறியுள்ள பிள்ளைகளுதான் கொழும்பின் அரசாங்க பாடசாலைகளில் மாணவர்கள்.

எனது நோக்கம், இத்ஹுதான். தமிழ் மொழிமூல, இரசாயனம், பௌதிகம், உயிரியல், புவியல், அரசறிவியல், கணக்கீடு, வணிகவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை விசேட பயிற்சி அளிக்கும் ஆசிரிய பயிற்ச்சி கலாசாலை அமைய வேண்டும். அவர்களை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, கம்பஹா, மொனராகலை, குருநாகலை, புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதாகும். அவசியப்படும் வன்னி, கிழக்கு மாகாண பாடசாலைகளிலும் நியமிக்க வேண்டும்.

நியமிக்கப்படுபவர்கள் குறைந்த பட்சம் பத்து வருடங்கள் அதே பாடசாலையில் பணி செய்ய வேண்டும். தவிர்க்கமுடியாத இடமாற்றம் வேண்டுமென்றாலும்கூட, அதே பாடத்துக்கான மாற்று ஆசிரியர் கிடைத்தே பிறகே இடமாறி செல்ல வேண்டும்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை நோக்கி  நாடாளுமன்றத்தில், தயவு செய்து பாரத பிரதமர் மோடி, மலையக மக்கள் நல்வாழ்வுக்காக தருவதாக உறுதியளித்துள்ள, இலங்கை ரூபா.300 கோடிக்கும் குறையாத நிதியை “தமிழ் மொழிமூல” ஆசிரியர் பயிற்சிக்கான விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைக்க பயன்படுத்துங்கள் என்றும் சொன்னேன். மலையக பல்கலைக்கழகம் அதையடுத்து வரட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு இப்போது அவசரப்பட வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

இந்த வருடம், 2023 ஜனவரி மாதமே இதுபற்றி நான் இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் கோபால் பாகலே உடன் நான் உரையாடியுள்ளேன். எமக்கான விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலையும், எமது பெண்களுக்கான விசேட தாதியர் பயிற்சி கல்லூரியும் அமைத்து கொடுங்கள் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதற்கான நிதியை பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு பெற்று தாருங்கள் எனக்கூறினேன்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்கள் மலையக மக்கள் தொடர்பில் நடக்கட்டும். ஆனால், பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் நிதியை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும், இலங்கை அரசின் கல்வி அமைச்சும் இணைந்து பயன்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள “இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளையை, மீண்டும் புதுபித்து, அதன் நோக்கங்களை விரிவிபடுதி இதை செய்து தாருங்கள் என நேற்றுக்கூட நான் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை நோக்கி சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் கூறினேன்.

நான் கூறிய விடயங்களை புரிந்துக்கொள்ள முடியாத தமிழ் எம்பிக்களை பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால், அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்பி அனுப்பும் அப்பாவி பெற்றோருக்கு புரியும் என நினைக்கிறேன். தமிழ் பாடசாலை அதிபர்களுக்கும் புரியும் என நம்புகிறேன்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd