எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும். நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய முதலீட்டாளர்கள் தேவை எனும் அடிப்படையில், அதற்கான வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில், தற்போதுள்ள பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,75,000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் 85% பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.