உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று காலை கூடுகிறது.
இதன் நடவடிக்கைகளை ஊடகங்கள் அறிந்துக் கொள்ளும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் நடவடிக்கைகளை ஊடகங்கள் மூலம் செய்திகளாக வெளியிடுவதற்காக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த 22 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த விஷேட நாடாளுமன்ற குழுவின் தலைவராக பிரதி சபா நாயகர் ஆனந்த குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக இதற்கு முன்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அது தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்ததா என்பது உள்ளிட்ட விடயங்களை இந்த தெரிவுக்குழு கண்டறியவுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது ஆளுநர் அல்லது ஏனைய நபர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் விடயங்களை கண்டறிவதற்கான பொறுப்பு இந்த விஷேட தெரிவுக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.