web log free
July 27, 2024

மாகாண சபைகளுக்கு நிதி அதிகாரம், ஜனாதிபதி கருத்து

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமான wionற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கேள்வி – எனது முதல் கேள்வி இந்திய இலங்கை உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் இந்த உறவுகள் குறித்த உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன ?

பதில் - உண்மையில் இந்திய இலங்கை உறவுகள் முன்னேற்றமடைகின்றன. நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றோம், இரு நாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க முயல்கின்றோம். இதுவே சரியான வழி என நான் கருதுகின்றேன்.

கேள்வி- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை 4 பில்லியன் டொலர் உதவியுடன் முன்வந்த நாடு இலங்கை உங்கள் நாட்டிற்கான இந்தியாவின் உதவியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்-நாங்கள் இந்தியாவிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பிபிழைத்திருக்கமாட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக வர்த்தக பொருளாதார வெற்றிகள் குறித்து முன்னோக்கி செல்வதற்கு இதுவே வழி.

கேள்வி- உங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது?

பதில்- நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்தோம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் ஓசிசியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளவேண்டும். எங்களின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆரம்ப கட்ட நடவடிக்கைள் தற்போது இடம்பெறுகின்றன உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான உடன்படிக்கைக்கு பின்னர் நாங்கள் ஏனைய அனைத்து கடன்வழங்கிய நாடுகளுடனும் நிதியமைப்புகளுடனும் உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி – அது எப்போது சாத்தியமாகும்?

பதில்- ஜூன் மாதமளவில் அது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.

கேள்வி – பிராந்திய பாதுகாப்பு என்ற விடயம் குறித்து பேசும்போது சீன கப்பல்களின் விஜயம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சீன கப்பல்களிற்கு அனுமதி வழங்குவது இல்லை என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன். சீன கப்பல்களின் விஜயங்கள் குறித்தும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் குறித்தும் கருத்துகூற முடியுமா?

பதில்- நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளளோம்.

இலங்கைக்கு வந்த சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்.

ஏனைய நாடுகளின் ஏனைய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்ப .வேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இதன்காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வர முடியாது என நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம்.

கேள்வி – உங்களிற்கு சீனா கப்பல்களின் வருகை குறித்து தெரியவருமா?

பதில் - சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இந்திய கப்பல்கள் வருகின்றன, ஜப்பான் கப்பல்கள் வருகின்றன அனைத்து கப்பல்களும் வருகின்றன – அமெரிக்க கப்பல்கள் வருகின்றன.

கேள்வி- இந்தியா இந்த விஜயங்கள் குறித்து கவலையடைந்துள்ளது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து கவலையடைந்துள்ளது என்பதால் சீனா இந்தியாவிற்கும் உங்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றது என கருதுகின்றீர்களா?

பதில் - சீனகப்பல்கள் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகின்றன. சீனா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் கரிசனை கொள்ளவேண்டிய விடயம் என்று எதுவுமில்லை, இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை, குறையவுமில்லை, மேலும் இலங்கைக்கு வருகை தராத நாடுகளின் கப்பல்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

கேள்வி – கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் பங்களிப்பு – சீனா உரிய பதில்கள் இல்லாமல் இழுத்துச்செல்கின்றதே?

பதில் - கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவிடம் நோக்கம் உள்ளது. அவர்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இதற்கான அவர்களின் கட்டமைப்பு ஏனைய நாடுகளிடமிருந்து வித்தியாசமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படவேண்டும். அந்த நாட்டின் எக்சிம் வங்கியுடனும் இணைந்து செயற்படவேண்டும்.

கேள்வி – மற்றுமொரு முக்கியமான விடயம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது. இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது – முன்னோக்கி செல்வதற்கான வழி என்ன?

பதில் - அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன் காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும். இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டித்தன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என்று கூறினார்.