Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியூடாக இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இலங்கை கடலுக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் தொலைபேசி கலந்துரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் செயற்பாடு நிறுத்தப்படுமென தமிழக அரசாங்கம் உறுதியளிக்கும் பட்சத்தில் மாத்திரமே மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முடியும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2022 மார்ச் மாதத்தில் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இறுதியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து GPS கருவிகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றத்திற்காக 5 இந்திய மீனவர்களுக்கு அண்மையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் பணிப்பகிஷ்கரிப்பையும் முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இலங்கை மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியிருந்தனர்.
இலங்கை மீனவர்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் உள்நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 88 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.