இலங்கையில் சீனாவின் ராணுவ தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவலை, இலங்கை பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் மறுத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பரப்பில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் சீனா, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக முதல்கட்டமாக 307 மில்லியன் அமெரிக்க டாலர், 2-வது கட்டமாக துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 757 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. பின்னர், கடன் சுமையைப் பயன்படுத்தி, ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுக் கொண்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, சீனாவிடம் வாங்கிய வரம்பற்ற கடனே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் பிரேமிதபண்டார தென்னக்கோன் கொழும்புவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “இலங்கை எல்லைக்குள் ராணுவ தளம் அமைப்பது தொடர்பாக சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவல்கள் தவறானவை. இலங்கை எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும், எந்த நாடும் அதன் ராணுவ தளத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
நன்றி – தி ஹிந்து