பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில் தற்போதுள்ள தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்குவது குறித்து கவலைகளை எழுப்பிய சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை இயக்கமான பெப்ரல் (PAFFREL), இந்த நடவடிக்கையானது தேர்தலை ஒத்திவைக்கக் கூடும் என குற்றம் சுமத்தியுள்ளது.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ், 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மீதமுள்ள 65 ஆசனங்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார வாக்களிப்பு முறையின் மூலம் ஒதுக்கப்படும்.
இது குறித்து தனது கவலைகளை வெளிப்படுத்திய PAFFREL நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தல் முறைமை திருத்தங்களுடன் இலங்கையின் முன்னைய சந்திப்புகள் தேர்தல் செயற்பாடுகளை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும், இதனால் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
“இரண்டு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இதற்கு ஒரு உதாரணம். எனவே, தேர்தல் முறையைத் திருத்துவதற்கான உத்தேச நடவடிக்கையானது தேர்தலை தாமதப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என எமக்கு சந்தேகம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் முறைமையில் எந்த மாற்றத்திலும் எல்லை நிர்ணய செயல்முறையின் முக்கிய பங்கை ஹெட்டியாராச்சி வலியுறுத்தினார், எல்லை நிர்ணய செயல்முறையை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தேர்தல் அதிகாரிகள் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான கடந்த நிகழ்வுகள் குறித்து கவனத்தை ஈர்த்தார்.
இந்தக் கருத்தாய்வுகளின் படி, எல்லை நிர்ணய செயல்முறை தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தேர்தல்களில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று PAFFREL எச்சரித்துள்ளது.
“இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்கத் தவறினால், திட்டமிட்டபடி தேர்தல் காலக்கெடுவைத் தடுக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.