ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சி யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிடம் வினவிய போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், சட்டத்தரணியூடாக தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாளை(18) இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.