வெலிவேரிய நகரின் ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் நால்வரையும் விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2013 ஓகஸ்ட் முதலாம் திகதி, கம்பஹா வெலிவேரி, ரத்துபஸ்வலவை மையமாகக் கொண்ட தனியார் வர்த்தகக் குழுவொன்றின் தொழிற்சாலையொன்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாகக் கூறி, சுத்தமான நீரைக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இந்த இராணுவ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்து 11 வருடங்கள் ஆகிறது.
அப்போது, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
அந்த தாக்குதலில் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 10 மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண தேசப்பிரிய குணவர்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சட்டமா அதிபர் நிரூபிக்கத் தவறியதாக உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, நிஷாந்த ஹப்புஆராச்சி மற்றும் சஹான் மாபா பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இன்று காலை 9.30 மணியளவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.