எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அல்லது 12ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்ததாக தேசிய பத்திரிகையொன்று இன்று (20) செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உரிய தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி அல்லது 12ஆம் திகதி மிகவும் பொருத்தமான திகதியாக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் விதிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் 1981 இன் விதிகளின்படி, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்வதை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அந்த அறிவிப்பின் பின்னர் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்சம் 28 நாட்களும் அதிகபட்சமாக 42 நாட்களும் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு குறைந்தது 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தலில் தோற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த மதிப்பிடப்பட்ட தொகை அதிகரிக்கலாம் எனவும் தேர்தலை நடத்தும் காலத்தை நீடிக்க நேரிடும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.