தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதனிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவிக்கின்றார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலையால் கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய டெங்கு அபாயத்தை குறைப்பதற்கான உடனடி தீர்மானத்தை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.