சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கடன் தவணை ஜூலை மாதத்திற்குள் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (மே 28) நடைபெற்ற நாணயக் கொள்கை விளக்க ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்பு வேலைத்திட்டத்தில் உயர் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக் கொள்கைகளில் பத்தில் ஒரு பங்கு கூட மாறினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாட்டுக்கு ஏற்ற கொள்கைகளை மாற்றுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், மத்திய வங்கியின் சுதந்திரம், அரசாங்கத்தின் கடன் நிலைத்தன்மையைப் பேணுதல், நாட்டின் நிதிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், நாணயக் கொள்கை, அரசாங்கம் எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது மற்றும் எவ்வாறு செலவழிக்கிறது என்ற கொள்கைகளின் திசை மிகவும் முக்கியமானது மற்றும் தொடர்புடைய கொள்கைகள் அரசாங்கம் மாறினாலும் இல்லாவிட்டாலும் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.