web log free
July 27, 2024

இன்று மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் மோடி

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (09) பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்று இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியினால் தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் இன்று விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000-க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வர பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, இந்திய பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பை அடிப்படையாகக் கொண்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழமையான வான்வழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸ் ஆணையாளர் சஞ்சய் அரோரா அறிவித்துள்ளார்.