எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவார் என சண்டே டைம்ஸ் அரசியல் எழுத்தாளர் தெரிவிக்கிறார்.
சண்டே டைம்ஸ் செய்தியின்படி, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி கடிதம் அனுப்பவுள்ளார்.
ஜனாதிபதியால் விரைவில் முன்வைக்கப்படவுள்ள இந்தக் கோரிக்கைக்கு பொஹொட்டு கட்சி இணக்கம் தெரிவிக்கும் என சண்டே டைம்ஸின் அரசியல் செய்தியாளர் கூறுகிறார்.
அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் தம்மிக்க பெரேராவை பிரதமராக நியமிக்கும் உடன்பாட்டின் அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக ஊடகங்களைக் கையாள ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சண்டே டைம்ஸின் மேற்கண்ட கட்டுரை தெரிவிக்கிறது.
அந்த குழுவின் தலைவராக சாகல ரத்நாயக்க உள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் பின்னர் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி மாத்தறையில் முதலாவது மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இவ்வாறான மேலும் பல பாரிய கூட்டங்கள் ஜூலை 7, ஜூலை 14 மற்றும் ஜூலை 21 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த பொது கூட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.