அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டமோ அல்லது தயாரோ இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோரிக்கை விடுக்கும் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாகவும், எனினும், தற்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்த திட்டமும், ஆயத்தமும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய அரசாங்க விதிமுறையாக கருதப்படுகிறது.
இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது உரிய அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், பூங்காக்கள், புகையிரதங்கள் மற்றும் கடற்கரைக்கு மக்கள் பிரவேசிப்பதை தடை செய்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் 17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்