தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள பரீட்சைத் திணைக்களத்தில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை உறுதிப்படுத்தினார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (15) நடைபெறவுள்ளது. இதில் இம்முறை 3,23,879 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
தமிழ் பிரிவில் 79000 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 2849 பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டுமென மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் நேற்று(12) நள்ளிரவு முதல் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
பரீட்சை நிலையத்திற்குள் வௌியாட்கள் பிரவேசிக்க இடமளிக்கப்படமாட்டாது என்பதுடன் பரீட்சைக்கு தேவையான பேனா, பென்சில் மாத்திரமே பரீட்சார்த்திகள் எடுத்துச் செல்ல முடியும்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் நொவெம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.