web log free
December 23, 2024

தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியை மற்றும் சுமந்திரன் செயல்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சி சமஸ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் முன்வைத்து வாக்குகளை பெறுகிறார்கள்.

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து தமது இருப்புக்களையும் சுயலாப அரசியலையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழரசு கட்சியை ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஜனாதிபதி அனுரவை சந்தித்து மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோருகிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரவை முதன் முதலில் சந்திக்க சென்ற சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அனுரவுடன் பேசாமல் மதுபான அனுமதிப்பத்திர பெயர்களை வெளியிடுமாறு கேட்கிறார்.

பெயர் பட்டியல் வெளியிடுவதை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் தனக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்துவதற்கும் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் மதுபான அனுமதி பத்திரங்களை வெளியிடுமாறு கேட்பதாக நான் கருதுகிறேன்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்த ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு அரசியல் நீதியாக ஆதரவு வழங்கிய கட்சிகளில் பிரதானமான கட்சியாக ஜே.வி.பி விளங்கியது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்களும் ஜே.வி.பியினர் தான்.

அதுமட்டுமல்லாது அரசியல் அமைப்புத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இராணுவத்தை தண்டிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதியாக அனுர காணப்படுகிறார்

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்த கட்சியைச் சார்ந்தவரிடம் தமிழரசு கட்சி சுமந்திரன் சந்திக்க சென்ற போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்க வேண்டும் அதுவே வாக்களித்த மக்களுக்கு தமிழரசு கட்சி செய்ய வேண்டிய கடமை அதை சுமந்திரன் செய்யவில்லை.

அது மட்டும் அல்ல. தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பொது வழியில் பேசப்படுவருகிறது.

ஆகவே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து விலகி தமது சொந்த சுயநல அரசியலுக்காக செயற்பாட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd