web log free
November 23, 2024

அரசனை நம்பி புருஷனை கைவிட்டு ஏமாந்த குருசாமிக்கு பரணி பதிலடி!

2013ம் வருடம், எமது கட்சிக்கு சுமார் 50,000 வாக்குகளை தனித்து ஏணி சின்னத்தில் மாகாணசபை தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அப்போது எமது தலைவர் மனோ கணேசனுக்கு வாக்களித்தவர்கள், குருசாமிக்கு மூன்றாம் விருப்பு வாக்காக 9,000 விருப்பு வாக்குகளைதான் வழங்கினார்கள். அப்போது, குருசாமி வெற்றி பெற்று மாகாணசபைக்கு தெரிவு செய்யப்படவில்லை. 

பின்நாளில் எமது தலைவர் பாராளுமன்றத்துக்கு தெரிவான பின் மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது கட்சியின் அரசியல் குழுவில் பிரேரணை கொண்டு வந்து தலைவர் மனோ கணேசன்தான் குருசாமியை மேல் மாகாணசபைக்கு நியமன உறுப்பினராக நியமித்தார். அதற்கு முன் ஒருமுறை தலைவரின் வழிகாட்டலில், கொழும்பு மாநகரசபைக்கும், கட்சியின் ஏனைய பல அங்கத்தவர்களுடன் குருசாமியும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினராக தெரிவு செய்யபட்டார். 

இரண்டு வருடங்களுக்கு முன் 2022ம் வருடம், கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு குருசாமியை, தலைவர் மனோ கணேசனும், தவிசாளர் ஜெயபாலனும், நிதி  செயலாளர் கணேசனும் அரசியல் குழுவில் பிரேரணை கொண்டு கூட்டாக நியமித்தார்கள். 

இவைதான் குருசாமிக்கு தலைநகர தமிழ் சமூகத்தில் கிடைக்க பெற்ற பிரதான அங்கீகாரங்கள். ஆனால் இன்று  தனக்கு இவ்வாறு சிறப்பு செய்த கட்சியையும், தலைமையையும், பாராளுமன்றம் கலைக்கபடும் வரை, இரை தேடும் நரி போல் அமைதியாக காத்திருந்து விட்டு, தேர்தல் வேளையில் திட்டமிட்டு குருசாமி அவமானபடுத்துகிறார். யார் தந்த ஒப்பந்தமோ என்று தெரியவில்லை. எப்படியும் இது மிகவும் ஒரு ஈனத்தனமான செயல். இதையிட்டு நாம் மிகவும் மனம் வருந்துகிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு உறுப்பினருமான பரணிதரன் முருகேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   

கே. ரி. குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளிக்கும் முகமாக, பொது செயலாளர் பரணிதரன் முருகேசு மேலும் கூறி உள்ளதாவது 

கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நிலைபாட்டை தீர்மானிக்க நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலை அடிக்கிறது”  என்று குருசாமி பேசினார். பிறகு நாம் ஏக மனதாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்த போது, அதை ஏற்று கொண்டார். சஜித் பிரேமதாசவுக்காக எமது தலைவர் ஆதரவாளர்களுடன் தெருத்தெருவாக பிரசாரம் செய்த போது, செட்டியார் தெருவுக்கு எமது தலைவருடன் வந்து குருசாமி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.  இதன் பின் இன்று, ஜேவிபிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறுகிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று மாற்றங்கள்.     

தற்போது, நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஜேவிபியில் சேர்ந்து தேர்தலில் போட்டி இட வேண்டும் என்ற தன் விருப்பத்தை எமக்கு கூறி விட்டு குருசாமி கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அதை அவர் கடந்த 8ம் திகதி செட்டியார் தெரு உணவகம் ஒன்றில் நடத்திய ஒரு கலந்துரையாடலில் பகிரங்கமாகவே கூறுகிறார். அது செய்தி காணொளியாகவும் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல, ஜேவிபியின் வேட்பாளர் நியமன நேர்முக பரீட்சைக்கு தான் சென்றதாகவும், ஆனால், ஜேவிபி தன்னை வேட்பாளராக  தெரிவு செய்யவில்லை என்றும்கூட வெட்கமில்லாமல் கூறுகிறார். 

ஒரு கட்சியின் பொது செயலாளராக பணியாற்றிய ஒருவர், இன்னொரு கட்சியின் வேட்பாளர் நியமன நேர்முக பரீட்சைக்கு போவது என்பது எத்தகைய வெட்கம் கெட்ட செயல் என்பது இவருக்கு புரியவில்லையா? அப்படியும் வேட்பாளர் நியமனத்தை தேடி போவதற்கு கூட குருசாமிக்கு, எமது கட்சியில் அவர் வகித்த பொது செயலாளர் என்ற கெளரமான பதவிதான் காரணமாகி உள்ளது என்பதுகூட குருசாமிக்கு புரியவில்லையா?  குருசாமியின் கலந்துரையாடலில் பங்கு பற்றிய பலர் எமது தலைவரின் ஆதரவாளர்கள். அவர்கள் அந்த உரையாடலில் கலந்து கொண்ட பின் அது பற்றி எமது தலைவருடன் உரையாடியுள்ளனர். 

கடைசியில் என்ன நடந்துள்ளது? வேட்பாளராக நியமனமாகும் தகைமை குருசாமிக்கு இல்லை என அவர் தேடி போன கட்சி முடிவு செய்துள்ளது. அதாவது “அரசனை நம்பி, புருஷனை விட்டு போனவருக்கு”,  இன்று இரண்டும் இல்லை என்று ஆகி விட்டது. இதன் மூலம், தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது என குருசாமிக்கு புரியவில்லையா?   

கட்சியில்  கெளரவமும், பொறுப்பும் மிக்க பொது செயலாளர் பதவியில் இருந்த குருசாமி இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட தானாக முன் வந்து கட்சி அரசியல் குழு கூட்டங்களை கூட்டியதே இல்லை. கட்சியின் அரசியல் குழு உட்பட சக உறுப்பினர்களுடன், மாவட்ட அமைப்பாளர்களுடன் குருசாமி ஒருபோதும் கலந்துரையாடியதில்லை. குறிப்பாக கொழும்பு மாவட்ட வட்டார, வலய அமைப்பாளர்கள் யார் என்றே குருசாமிக்கு தெரியாது. கொழும்பு மாவட்டம் என்பது புறக்கோட்டை மட்டுமல்ல. வட கொழும்பு, மத்திய கொழும்பு, ஊறுகொடவத்தை, கொலொன்னாவை, இரத்மலானை, ராஜகிரிய, பாதுக்கை ஆகிய தொகுதிகளில் நகர வத்தைகளில் பின்தங்கிய மக்கள் வாழ்கிறார்கள். கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியான அவிசாவளையில் பெருந்தோட்டங்களில் நமது மக்கள் வாழ்கிறார்கள். பொது செயலாளர், மேல் மாகாணசபைக்கு நியமன உறுப்பினர், என்ற பதவிகளை வகித்த போது குருசாமி இந்த மக்களுடன் ஒரு போதும் உறவுகளை  பேணவில்லை. இவற்றை சவாலாக நான் குருசாமிக்கு கூறுகிறேன். முடிந்தால் மறுக்கட்டும்.  

நமது கட்சி தேர்தல் காலத்தில் உருவாகும் சுயேட்சை குழு ஒன்று அல்ல. 1940களில் இலங்கை வந்த மாகாத்மா காந்தியால் ஸ்தாபிக்கபட்ட இலங்கை-இந்திய காங்கிரசில் இருந்து உருவாகிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பின்னாளில் உருவான அதன் அரசியல் பிரிவுதான், இன்றைய ஜனநாயக மக்கள் முன்னணி. இன்று எமது கட்சியும், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளையும் கொண்டு நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, நுவரேலியா, பதுளை  என்ற சுமார் 9 மாவட்டங்களில் விருட்சமாக வளர்ந்து உள்ளோம். எமது கட்சிக்கும், கூட்டணிக்கும் மனோ கணேசன் அவர்கள்தான் தலைவராக பணி செய்கிறார். இவைபற்றி எவ்வித  அக்கறையும்  கொள்ளாமல், அறியாமல், தனது குழப்பல்வாத சிந்தனை காரணமாக அனைத்தையும் அழிக்க குருசாமி முயல்கிறார்.

ஊழலற்ற அரசியலை பற்றி திடீரென குருசாமி பேசுகிறார்.  நாமும் அதையே எதிர்பார்க்கிறோம். அதை ஜேவிபி அரசு செய்யுமானால் நாம் ஆதரிப்போம். இந்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை அநேகமான பெரும்பான்மை இன அரசியல்வாதிகளை நோக்கி சிங்கள மக்கள் இன்று கூறுகிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளில் அப்படி ஒரு சிலர் இருந்தால் அவர்களை மக்கள் கட்டாயமாக தெரிவு செய்ய கூடாது. ஆனால், அதை கூறி இங்கே எல்லோரையும் ஒரே கூடையில் போட குருசாமி மறைமுகமாக முயல்கிறார். குருசாமி யார் என எங்களுக்கு அவர் மாளிகாவத்தையில் வாழ்ந்த காலம் முதல் தெரியும். தலைவர் மனோ கணேசன் யார் என குருசாமிக்கும் தெரியும். அமைச்சரவை அமைச்சராக இருந்த போது, தனக்கு கொழும்பு கறுவாதோட்ட பகுதியில் ஒதுக்க பட்ட  சொகுசு பங்களாவையே வேண்டாம் என்று ஒதுக்கியவர், எமது தலைவர். அவரது நேர்மை எப்போதும் எரியும் நெருப்பு. 

ஜேவிபி அரசாங்கத்துடனான நல்லுறவை நாம் பார்த்து கொள்கிறோம். அதற்கு குருசாமி என்ற தரகர் எமக்கு தேவையில்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எமது தலைவரின் நீண்ட கால நண்பர். பிரதமர் ஹரினியும் அப்படியே. அதை தலைவர் மனோ கணேசன் பகிரங்கமாக கூறியும் உள்ளார். அதற்காக நாம் கட்சியை கலைத்து விட்டு,  ஓடோடி சென்று ஜேவிபியில் இணைய வில்லை. “எமது வாக்கு-எமது பலம். நாம் வெல்வோம்-எடுத்து சொல்வோம்” என்ற எமது தேர்தல் சுலோகத்தின்படி எமது மக்களின் பிரதிநிதிகளாக நாம் பாராளுமன்றம் சென்று அங்கே அரசாங்கத்துக்கு, கொழும்பு முதல் நுவரேலியா வரை வாழும் எமது மக்களின் தேவைகளை எடுத்து கூறி,  அரசுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்கி செயற்படுவோம். அதுதான் கெளரவமான அரசியல் நடைமுறை என்பதை இன்று அரசியல் பிழைத்து போன குருசாமி உணரவேண்டும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd