புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டின் அருகே பரபரப்பு ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 03 மாவட்ட ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் பெற்ற மொத்த வாக்குகளின்படி இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளையும் கைப்பற்றியது.
புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளரினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டார்.
இது தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒன்றிணைந்த கட்சிகளின் அனுமதியின்றி கட்சியின் செயலாளர் அவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த முன்னணியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் நியமனம் வழமையானதல்ல என அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் ரவி கருணாநாயக்கவின் பெயர் நாடாளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் பல தரப்பினரும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாத் சாலி, ரவியின் வீட்டை முற்றுகையிட்டு இந்த முடிவை திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்று சில குழப்பங்கள் ஏற்படும் என ஊகிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.