web log free
April 20, 2025

தேசியபட்டியல் விவகாரத்தால் சிலிண்டருக்குள் குழப்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் தொடர்பில், அந்த கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடாமையும் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவை நியமிக்க கட்சி உறுப்பினர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறனதொரு பின்னணியில், புதிய ஜனநாயக முன்னணி கட்சிக்கு உள்ளேயும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதன் கூட்டணி கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இதில் ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில், ரவி கருணாநாயக்கவை நியமிக்க கட்சியின் செயலாளர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

தற்போது, மீதமிருந்த மற்றைய பதவிக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd