சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அப்பால் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புவதில் மத்திய வங்கி வெற்றியீட்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பத்திரிகை ஆசிரியர்களிடம் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.
இதுவரையில் வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுவது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் வாகன இறக்குமதி அவசியமான ஒன்று எனவும் வாகன இறக்குமதி அதிகமாக நடந்தால் வரிவிதிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்தினர் நேற்று மத்திய வங்கியின் தலைமையகத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து நாட்டின் நிதி மற்றும் பொருளாதார கல்வியறிவு குறித்து பத்திரிகை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.