web log free
January 04, 2025

சுனாமி - இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

டிசம்பர் 26, 2004 அன்று சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எனும் இராட்சத அலைகளை உருவாக்கியது.

இந்த அலைகள் தான் எம் உறவுகளை காவுக்கொள்ளப்போகிறது என்பது தெரியாமலேயே அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கடலில் நிகழ்ந்த மாற்றத்தை காண கரையோரங்களில் ஏராளமான மக்கள் பிரசன்னமாகியிருந்தனர்.

அது வரை கண்டிராத அந்த அரிய நிகழ்வை என்னவென்று தெரியாமலேயே பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு சுனாமி என்னும் ஆழிப்பேரலை. கண்ணிமைக்கும் நொடிக்குள் எல்லாம் அழிந்து போனது.

உயரிழந்து, உடமையிழந்து ஏராளமான மக்கள் நிர்கதியாகினர். அதுவரை மானுட பெருமானங்கள் பார்த்து பார்த்து கட்டிவைத்த மாடமாளிகைகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர பங்களாக்கள் என ஏழை, பணக்கார பாகுபாடு இன்றி அழித்து சென்றது சுனாமி என்னும் இராட்சத அலை.

இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 5000 பேர் காணாமல் போயினர்.

இந்நிலையில் சுனாமி பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களையும், காணாமல்போனவர்களையும் நினைவுக்கூறும் நிகழ்வு டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்கப்படுகின்றது.

2012 முதல் இன்றைய தினத்தை தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது.

நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில் காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த ரயிலிருந்த 1,700 பேருடன் சேர்த்து எமது நாட்டில் 35,000 மக்கள் வரை உயிரிழந்தனர்.

இலங்கை ரயில் சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அனைவரையும் எல்லையற்ற சோகத்தில் ஆழ்த்திய ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சர்வதேச ரீதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலைப் போன்று மீண்டும் ஒரு முறை இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க எமது செய்திப்பிரிவு பிராத்திக்கின்றது.

அதற்கமைய, சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய பாதுகாப்பு தினத்திற்கு இணையான பிரதான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதுதவிர, மாவட்ட மட்ட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Last modified on Thursday, 26 December 2024 04:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd