web log free
January 04, 2025

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை!

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா தமிழ்செல்வன் நேற்று மாலை (டிசம்பர் 26) தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரை கடத்திச் செல்ல முற்பட்டதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் விபரங்கள் பொலிஸாரிடம் இருப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தம்மை கடத்த வந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என நேற்று மாலை (டிசம்பர் 26) அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாக, தாக்குதலுக்கு உள்ளான கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் முருகையா தமிழ்செல்வன் குறிப்பிடுகின்றார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த குறித்த நபர் தன்னையும், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரையும் திட்டியதாக முருகையா தமிழ்செல்வன் சக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

சக ஊடகவியலாளரை கடத்த முயன்ற இருவரையும் இன்று (டிசம்பர் 27) மாலைக்கு பின்னரும் பொலிசார் கைது செய்யத் தவறியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீரகேசரி, தினக்குரல், உதயன், தமிழ்வின் உள்ளிட்ட பல தமிழ் ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களாக பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள், மண், மணல் கடத்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.

மேலும் முருகையா தமிழ்ச்செல்வன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd