உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான முழுப்பொறுப்பினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவினை அமைத்து, சுமத்த முயற்சிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்த கூறுகையில், “நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான முழுமையான அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கே உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் ஜனாதிபதியின் கருத்து, பணிப்புரை உள்ளிட்டவற்றுக்கு சபாநாயகர் மதிப்பதிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பொறுப்பை ஜனாதிபதி மீது சுமத்த முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்துக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும்.அதனைவிட அதிகமாக பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும். அதற்கும் அதிகமாக தாக்குதல் தொடர்பில் முன்னதாக தகவல் கிடைத்தும் அமைதியாக இருந்த பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.