உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார். இந்நிலையில், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர்.
“கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்படி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.