web log free
April 26, 2025

இலங்கை - இந்தியா இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, மின்சார பரிமாற்ற ஒப்பந்தம், டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம், திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்தல் ஒத்துழைப்பு ஒப்பந்தம், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய மருந்து நிறுவனம் மற்றும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று(05) பரிமாற்றப்பட்டன.

இதன் பின்னர், 3 அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் இணைந்து கொண்டனர்.

இதற்கமைய தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புளை விவசாயக் களஞ்சிய கட்டடத் தொகுதி மற்றும் 5000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்உற்பத்திக்கான உபகரணங்களை நிறுவும் திட்டம் என்பன காணொளி ஊடாக திறந்து வைக்கப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd