நாட்டின் மிகவும் ஆபத்தான குற்றவாளியாகக் கருதப்படும் தற்போதைய பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் ஹரக்கட்டாவின் மனைவியுடன் கைது செய்யப்பட்டதாகவும் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி மலேசியா வழியாக தாய்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது மலேசிய பொலிஸாரால் பிடிபட்டுள்ளனர் என மலேசிய செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக பொலிஸ் தலைவர் பிரியந்த வீரசூரிய விசாரித்தபோது,கெஹல்பத்தர பத்மே மற்றும் மூன்று பேரை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால், பொலிஸார் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மலேசிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள அளுத்கடே நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் உள்ள மூளையாக செயல்பட்டவர் கெஹல்பத்தர பத்மே என்று நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கமாண்டோ சாலிந்த தலைமை தாங்கினார்,
மேலும், சாலிந்த என்ற பாதாள உலக தலைவர் பத்மேவின் கும்பலில் சித்தாந்தவாதியாகவும் நம்பப்படுவதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
பத்மேவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பாதாள உலகக் குண்டர்களில் சாலிந்தவும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கம்பஹா பாதாள உலகத்திற்காக கணேமுல்ல சஞ்சீவவிற்கும் கெஹெல்பத்தர பத்மேவிற்கும் இடையே நீண்டகால பகை இருந்தது.
இந்த மோதல்களில் இரு தரப்பிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்களும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.