web log free
July 12, 2025

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை கையிலெடுத்த உமாகுமரன்

பிரித்தானிய (UK) அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி   விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளதா என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் இறுதியாக இந்தக் குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றிய போது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்கள் வெளிப்படுத்திய ஆதரவிற்கும் எனது நன்றி என வெளிவிவகார அமைச்சர் டேவிட்லமியிடம் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும், இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மார்ச் மாதம் பிரித்தானிய தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தி அடைகிறேன். 

சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக. இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம்.

ஆனால் கவலை அளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை  சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரித்தானிய ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) கேள்வி எழுப்பியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd