web log free
August 31, 2025

நாடு திரும்பினார் ஜனாதிபதி

கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுடனும் மாலைதீவு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரச பிரதானிகளுடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவும் பரிமாறப்பட்டன.

“குரும்பா மோல்டீவ்ஸ்” விடுதியில் ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு விசேட இராப்போசன விருந்துபசாரம் அளித்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் மாலேயில் உள்ள சுல்தான் கார்டனில் ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்.

மேலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வணிக மன்றத்திலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்தித்து ஜனாதிபதி உரையாற்றினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 60 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கை, மக்களுக்கு இடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd