web log free
August 27, 2025

முத்துஐயன்கட்டு விவாகரம் தொடர்பில் பொலிஸ் தரப்பில் விளக்கம்

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி  காணாமலான பின்னர், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர், நீரில் மூழ்கியே உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு விசேட அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்குச் சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாமிலிருந்து அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக சிலர் முகாமுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்களை விரட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டபோது, தப்பிச்செல்ல முயன்றவர்களில் ஒருவர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வட  மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட குழு விசாரணைகளை முன்னெடுக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் சிப்பாய் ஒருவரை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாமுக்குள் நுழைந்து பொருட்களை திருடுவதற்காக  உதவிய சந்தேகத்தில் மேலும் இரண்டு சிப்பாய்களையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான மூவரும் 09.08.2025 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். மூன்று சந்தேகநபர்களையும்  இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சடலம் தொடர்பாக வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும்  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd