‘‘மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா’’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலி. வடக்கில் கடற்படையின் கட்டுப் பாட்டின் கீழுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படையினர் உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ். மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட் டியுள்ளார்.
இதுதொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும். அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, ஜனாதிபதி வேட் பாளராக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை தமது அரசாங்கம் பொறுப்பேற்றதும் படிப்படியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தார்.
ஆனால், இந்த அரசாங்கம் பொறுப் பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் வலி. வடக்கு மக்களின் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டும் விடுவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்களை விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் வாக்கு களைப் பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகி றது. யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்க ளைக் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.
இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா?
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகிறமை அனைவரும் அறிந்த விடயம். குறிப்பாக கூறப்போனால் வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.இலங்கையை ஆட்சி பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.