web log free
November 15, 2025

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இதன்படி, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 

பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd