web log free
December 03, 2025

அஸ்வெசும கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

”வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக டிச. 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தத்துடனான சூழல் காரணமாக அதனை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, 2023ஆம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்காக முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வருவோர் மற்றும் இதுவரை அதனை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் குறைபாடுகளை தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயலில் உள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழி, கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிட முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd