அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் செய்திகளை போலீஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கினால், அரசுக்கு ஊடக அடக்குமுறை தேவையில்லை என மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, பூஜ்ய வல்வாஹெங்குண வேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
“போலீஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லரை எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தி வாசிக்க நியமிக்க வேண்டும். அப்படியானால் அரசுக்கு ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்தும் போது இவர்களுக்கு கோபம் வருகிறது.
வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காமல், வேலை செய்து காட்டியிருந்தால், ஊடகங்கள் இவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. தங்களது இயலாமையை மறைக்க ஊடகங்களின் வாயை அடக்க முயற்சிப்பது தவறான செயல்.
1971 மற்றும் 1989 காலகட்டங்களில் அச்சுறுத்தலும் வன்முறையும் மூலம் அதிகாரத்தைப் பெற முயன்றனர். ஆனால் அது வெற்றியடையவில்லை. குறைந்தபட்சம் இப்போது அதிகாரம் கிடைத்த பிறகாவது, இந்த அச்சுறுத்தலும் கர்ஜனையும் நிறுத்தப்பட வேண்டும்.
அதிகாரம் பெற்ற பிறகும், முன்பு செய்த அதே செயல்களையே இவர்கள் தொடர்கிறார்கள். புத்தமதத்துக்கும் புத்த கலாசாரத்துக்கும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதே நேரத்தில், மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களுக்கும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றினால், இயற்கை தண்டனை வழங்கும். அதனால்தான் சமீபத்தில் நாடு பெரும் பேரழிவை சந்தித்தது” என தம்மரதன தேரர் தெரிவித்தார்.


