பிரதமர் ஹரிணி அமரசூரியிடம் உலகிலேயே மிக மோசமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிலர் செயற்பட்டு வருவதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர்,
“என்னை அவதூறாக பேசினால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கு யாரை இலக்காகக் கொண்டு இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றன? ஒரு பெண்ணாக இருக்கும் பிரதமருக்கு எதிராக உலகில் உள்ள மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர்,
“உங்களிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினர் இன்றி வந்தால் அவரைத் தாக்குவீர்களா? தாக்கத் திட்டமிடுகிறீர்களா?
எதுவும் செய்யாமல் இருக்கும் காட்டுப் பன்றியும் ஆபத்தானது. குண்டு பட்ட காட்டுப் பன்றி இன்னும் அதிகமாக ஆபத்தானது. தான் இறக்கப் போவதை அறிந்ததால், இறப்பதற்கு முன் பெரிய தாக்குதலை நடத்த முயலும். அரசியல் ரீதியாக சுடப்பட்டு, இன்று அநாதைகளாக மாறியுள்ள சில ஊழலாளர்களே இதன் பின்னணியில் உள்ளனர்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.


