பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரினி அமரசூரியாவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் வெறுப்பூட்டும், அவதூறான பிரச்சாரங்களையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாட்டின் அறிவுஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இணைந்த அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய தாக்குதல்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாகரிக வரம்புகளை மீறுகின்றன என்றும், அவை தொடர்பில் தங்களது ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பெரும்பாலானவை, கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற, தவிர்க்கக்கூடியதாக இருந்த ஒரு பிழை தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான பிழைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நேர்மையான மற்றும் நியாயமான விமர்சனங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், தற்போது நடைபெறுவது பிரதமரின் தனிப்பட்ட மரியாதைக்கும் கௌரவத்திற்கும் சேதம் விளைவிக்கும் வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரமாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சில தாக்குதல்கள் பெண்களுக்கு எதிரான பொறாமை மற்றும் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதாகும். பிரதமர் இவ்வாறு பாலின அடிப்படையிலான அவமதிப்புகளுக்கு உள்ளாக்கப்படுவது அருவருப்பானதாகும் என்றும், இது 1960களிலிருந்து இலங்கையின் பெண் அரசியல் தலைவர்கள் எதிர்கொண்டுவரும் வெறுப்புத் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமூகத்தின் பின்னடைந்த சில தரப்புகள் முன்னெடுக்கும் இவ்வாறான பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சில மதகுரு அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்தப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளமை குறித்து குடிமக்களிடையே கடும் ஏமாற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பாடப்புத்தகப் பிழை குறித்து அரசு பொறுப்பை ஏற்று காவல் விசாரணை ஒன்றை ஆரம்பித்தமை பாராட்டத்தக்கது என அந்த குழு குறிப்பிட்டுள்ளது. டாக்டர் ஹரினி அமரசூரியாவின் முன்மாதிரியான பாராளுமன்ற செயல்பாடுகளையும், அவரது அறிவார்ந்த தலையீடுகளையும் நினைவுகூர்ந்துள்ள அவர்கள், இவ்வாறான அவதூறு பிரச்சாரங்களை பொருட்படுத்தாமல் நிர்வாக ரீதியான குறைபாடுகளை திருத்தும் துணிச்சல் அவரிடம் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் ஜகத் வீரசிங்க, டாக்டர் ராதிகா குமாரசுவாமி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க உள்ளிட்ட நாட்டின் முன்னணி பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் 58 பேர் இந்த இணைந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.


