web log free
January 12, 2026

புதிய வாகன இலக்கத் தகடு குறித்த அறிவிப்பு

இலங்கையில் புதிய வாகன இலக்கத் தகடு உற்பத்திக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

இலங்கையில் புதிய வாகன இலக்கத் தகடுகளை உற்பத்தி செய்வதற்காக நீண்ட காலமாக தாமதமாகியிருந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்திற்குள் அந்த ஒப்பந்தம் தென் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார்.

நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளின் எண்ணிக்கை 2 இலட்சம் (200,000) ஐ கடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவையின் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் இதுவரை அதிகாரபூர்வமாக நிறைவுசெய்யப்படவில்லை. எனினும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், முச்சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட 2 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நிரந்தர இலக்கத் தகடுகள் இன்றி காத்திருக்கின்றன. தினமும் பதிவாகும் புதிய வாகனங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மோசடிகளை தடுக்கும் மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிய டிஜிட்டல் இலக்கத் தகடுகள் 7 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொரட்டுவ பல்கலைக்கழகம் இதில் 6 அம்சங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள போதிலும், 7வது அம்சத்திற்கான சர்வதேச ஆய்வக சான்றிதழ் இதுவரை பெறப்படவில்லை. 25 வருடங்களாக நிலவி வந்த ஏகபோக உரிமை முடிவடைந்தமை, புதிய கொள்முதல் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தோல்வியடைந்த நிறுவனங்களின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், உற்பத்தியாளருக்கு பணிகளை ஆரம்பித்து முதல் கட்ட இலக்கத் தகடுகளை விநியோகிக்க அதிகபட்சமாக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், “உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், பெருமளவு நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை முழுமையாக விநியோகிக்க சில காலம் எடுக்கும்” என கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd