தேசிய மக்கள் சக்தி (NPP) அரசில் தற்போதைய பிரதமர் பதவியில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது என மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ மாற்றம் செய்ய எந்த அடிப்படையும் இல்லை என்றும், அந்தப் பதவிகளில் செயல்படும் போது பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய எந்தவித தவறும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக உருவாகியுள்ள நிலைமைகள் குறித்து முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும், அந்த விசாரணையின் மூலம் தவறு எங்கு ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படும் என்றும் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமரை பதவியில் இருந்து நீக்கப்படும் என கூறுவது எதிர்க்கட்சியின் பகல் கனவாகும் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு காரணம், அவர் எதிர்க்கட்சிக்கு ஒரு அரசியல் சவாலாக விளங்குவதுதான் என்றும் டில்வின் சில்வா கூறினார்.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரியவை அந்தப் பதவிகளில் இருந்து நீக்கவோ அல்லது அவர் பதவி விலக உள்ளதாகவோ பரவும் செய்திகளின் உண்மை நிலை குறித்து ஒரு வாராந்த பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டில்வின் சில்வா இந்தக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.


