ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டத்தை, தமக்கு இரண்டு ஓய்வூதியங்கள் கிடைக்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
“தற்போதைய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் அந்தச் சட்டம், அவருடைய இரண்டு ஓய்வூதியங்களையும் பாதுகாக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
புதிய சட்டத்தின் படி, ஒருவர் ஜனாதிபதியாக ஐந்து நாட்கள் கூட பணியாற்றினால், அவருக்கு அதற்கான ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு மேலாக, அவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக ஓய்வு பெற்றவர் என்பதால், அந்த ஓய்வூதியமும் அவருக்கு கிடைக்கும்.
இதன்படி பார்க்கும் போது, இரண்டு ஓய்வூதியங்கள் அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி பின்னர் ஜனாதிபதியாக ஆன அனைவருக்கும் வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.


