முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட போது, அரசுப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு முன்னாள் ஜனாதிபதி வருகை தந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலனை செய்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தலா 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீர பிணைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை 2025 ஒக்டோபர் 29ஆம் திகதி மீண்டும் அழைக்கவும் உத்தரவிடப்பட்டது.
அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விசாரணைகளை 2026 ஜனவரி 28ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.


