2025 ஆம் ஆண்டு இலக்கம் 04 கொண்ட மோட்டார் வாகன (ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடித் காலத்தை தற்காலிகமாக நீட்டிக்கும்) உத்தரவை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டை தாக்கிய மோசமான வானிலை நிலைமைகள் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதில் மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே காலப்பகுதியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஓட்டுநர் உரிமம் வழங்கல் மற்றும் புதுப்பிப்பு தொடர்பான கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் சேவைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு தடையாக அமைந்தன.
இந்த சூழ்நிலைகளால் பொதுமக்களுக்கு அநியாயமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், 2025 நவம்பர் 25 முதல் 2025 டிசம்பர் 24 வரை செல்லுபடியாகும் காலம் முடிவடைய இருந்த ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடித் காலம், அவை காலாவதியாக இருந்த நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த உத்தரவு 2025 டிசம்பர் 17 ஆம் திகதியிட்ட இலக்கம் 2467/52 கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 203 ஆம் அத்தியாயத்தின் கீழ் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, இதனை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


