உலகளவில் நடைபெற்று வரும் பெரிய அளவிலான போர் மோதல்களின் பின்னர் உருவாகும் மீள்கட்டுமான பணிகளில், இலங்கைக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இப்போதே கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு பணிகளில், இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை இணைக்கும் வழிகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, குறிப்பாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெறும் நபர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் சுமார் 6,000 பேர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர் என்றும், அவர்களின் சராசரி வயது சுமார் 42 ஆக இருப்பதால் அவர்கள் தொடர்ந்து பணியாற்றும் திறன் கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, ஓய்வு பெறும் இந்த நபர்களுக்காக கட்டுமானம் மற்றும் சுற்றுலா துறைகளை இலக்காகக் கொண்டு NVQ சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவர்களுக்கு முறையான தொழில்முறை பயிற்சி வழங்கப்பட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்பும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




