web log free
May 05, 2026

ரங்க நிஷாந்த மரணத்தில் சந்தேகம்

மர்மமான முறையில் மரணமடைந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான மரணப் பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே இது தற்கொலை என மருத்துவக் குழு முடிவெடுத்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஆரம்பத்திலேயே இது தற்கொலை எனக் கூறியிருந்த நிலையில், மருத்துவக் குழுவினர் ஏதேனும் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும், கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவை தானா என்பது உறுதிப்படுத்தப்படாமல் அவசர அவசரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

அத்துடன், இந்த மரணப் பரிசோதனையை மேற்கொண்ட குழுவில் தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் நண்பர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, தற்போதைய அறிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர், நாட்டின் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd