web log free
May 25, 2026

ஜப்பானில் கைதான 22 வயது இலங்கை இளைஞர் மர்ம மரணம்

ஜப்பானின் இபராகி மாகாணம், சுசியூரா பொலிஸ் நிலைய காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கடந்த மே 19 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் பொலிஸாரும் TBS News உள்ளிட்ட உள்ளூர் ஊடகங்களும் வெளியிட்ட தகவல்களின் படி, உயிரிழந்த இளைஞர் டொரிடே பகுதியில் வசித்து வந்தவர் என்றும், சந்தேகத்துக்கிடமான ஒரு சம்பவம் தொடர்பில் சுசியூரா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மே 19 ஆம் திகதி பிற்பகல் சுமார் 3.45 மணியளவில், தடுப்பு அறைகளை வழக்கமான முறையில் பரிசோதித்து வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த இளைஞர் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கடுமையாக உறக்கச் சத்தம் எழுப்பியதை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த சத்தம் திடீரென நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதிகாரி அறைக்குள் சென்று பார்வையிட்டபோது, இளைஞர் மயக்க நிலையில் சுவாசமின்றி கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பொலிஸ் நிலையக் காவலில் இருந்தபோது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதால், சுசியூரா மற்றும் இபராகி மாகாண அதிகாரிகள் உடற்கூறு பரிசோதனை மற்றும் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd