நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகவோ, மின்சார விநியோகம் துண்டிக்கப்படவோ, விவசாய உரங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படவோ எந்தவிதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலைமை மற்றும் இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணயச் சவால்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டின் இறக்குமதி செலவு 2 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் டொலர் கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அல்லது உரத் தட்டுப்பாடு போன்ற நிலைமைகள் உருவானால், அது நாட்டின் முழுமையான நிலைத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்தகைய சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க அரசு உறுதியுடன் செயல்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தை விலைகள் தொடர்ந்து அதிகரித்தாலும், அத்தியாவசிய பொருட்கள் எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் தொடர்ச்சியாக மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் மேலும் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


