சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தற்போதைய குறைந்த மட்டத்தில் நிலைத்திருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் மானியத் திட்டம் முடிவடைந்த பின்னரும் உள்நாட்டு எரிபொருள் விலைகளை உயர்த்தாமல் பராமரிக்கும் சாத்தியம் குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதிகாரிகள் தெரிவிப்பதாவது, உள்நாட்டு எரிபொருள் விலைகள் தொடர்பான எதிர்கால தீர்மானங்களை எடுப்பதற்கு முன், உலக எண்ணெய் சந்தையின் முன்னேற்றங்கள் மற்றும் விலை மாற்றங்களை அரசு நெருக்கமாக கண்காணித்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ், ஒரு லிட்டர் ஆட்டோ டீசலுக்கு 100 ரூபாவும், ஒரு லிட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாவும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதன் செயற்பாட்டு காலம் குறிப்பிட்ட காலக்கெடுவை விட ஒதுக்கப்பட்ட நிதியின் அளவைப் பொறுத்தே அமையும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில், ஒதுக்கப்பட்ட மொத்த நிதி முடிவடையும் வரை மானியத் திட்டம் தொடரும் என்றார்.
மேலும், பலர் நம்புவது போன்று இந்த மானியம் ஜூன் மாத இறுதியில் தானாகவே நிறைவடையாது என்றும், அதன் தொடர்ச்சி அரசின் தீர்மானம் மற்றும் நிதி கிடைக்கும் நிலைமையைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்திருப்பது, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிலைத்திருக்கச் செய்யும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். டீசல் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 125 வரை குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த விலை நிலை நீண்டகாலம் தொடர்ந்தால் கூடுதல் மானியம் இன்றியும் தற்போதைய எரிபொருள் விலைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
எனினும், குறுகியகால விலை மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். எவ்வித விலை திருத்தமோ அல்லது மானியக் கொள்கை மாற்றமோ மேற்கொள்ளப்பட வேண்டுமெனில், உலக எண்ணெய் விலைகள் நீண்டகாலமாக குறைந்த நிலையில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போது இலங்கையில் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 434 ரூபாவாகவும், ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 407 ரூபாவாகவும் உள்ளது. அதேவேளை, 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டர் 495 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லிட்டர் 478 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள் மானியத்தை நீடிப்பதா, திருத்துவதா அல்லது நிறுத்துவதா என்பது குறித்த இறுதி முடிவு, உலக எண்ணெய் விலைப் போக்குகள் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசால் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


