web log free
June 30, 2026

ஆசியாவின் பலமான நாடக இலங்கையை மாற்ற செய்ய வேண்டியது இதுதான்

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே இலங்கை ஆசியாவின் வலிமையான நாடாக முன்னேற முடியும் என்றும், தற்போது அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் ஐக்கியதேசியகட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி, உலுவிட்டிகே பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:

“ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். அவர் உடல்நலம் பெறும் வரை ஜி. எல். பீரிஸ் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இலங்கைக்கு நல்ல எதிர்காலம் தேவை. தற்போதைய அரசியலமைப்பின் வரம்பிற்குள் நாம் செல்லக்கூடிய அளவு சென்றுவிட்டோம். இதற்கு அப்பால் ஆசியாவின் வலிமையான நாடாக மாற வேண்டுமெனில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவும் மற்ற அனைத்து கட்சித் தலைவர்களும் தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க, நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மக்கள் அப்படியே செய்துவிட்டனர். இப்போது ஒரு கொசுவைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இப்போது முழு நாட்டிற்கும் ‘அஸ்வெசும’ போன்ற நிவாரணம் தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தபோது, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டு விலையும் உயரவும், குறைந்தால் குறையவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை.

IMF உடன் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த திட்டங்கள் தற்போது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தொடங்கிய திட்டத்தின்படி, 2025 டிசம்பர் 31 வரை அவர் ஆட்சியில் இருந்திருந்தால் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார். இந்த ஆண்டின் இறுதிவரை ஆட்சியில் தொடர்ந்திருந்தால் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கையும் நிறைவேற்றியிருப்பார். அதற்காகவே பொருளாதார அபிவிருத்தி சட்டத்தை அவர் கொண்டு வந்தார். சர்வதேச வர்த்தகத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.”

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd